தமிழக செய்திகள்

வீட்டில் மின் பழுதை சரிசெய்ய முயன்ற 14 வயது சிறுவன் பலி! - திண்டுக்கல் அருகே சோகம்

மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள குளத்தூர், செல்லப்பிள்ளை கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சற்குணம். இவரது மகன் சந்தோஷ்குமார் (14). இவர்களது வீட்டில் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமல் சந்தோஷ்குமார் தன்னிச்சையாக மின் பழுதை சரிசெய்ய முயன்றுள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT