தமிழக செய்திகள்

காதல் விவகாரத்தால் 14 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை - தந்தை கைது

பெற்றோர் பலமுறை கண்டித்தும், சிறுமி தன் காதலனுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார்.

விழுப்புரம்,

காதல் விவகாரத்தால் 14 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

மகள் கொலை

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த வி.பரங்கனி கே.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் சிவசாஸ்திரி. இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது இளைய மகள் விகாசினி (வயது 14) தனது தாயுடன் ராணிப்பேட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. பின்னர், இந்த காதல் பெற்றோருக்கு தெரியவந்தது. பின்னர், சிறுமியை கண்டித்து ராணிப்பேட்டையில் இருந்து வி.பரங்கனி கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.

வானூர் அருகே கரசானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஊருக்கு வந்தபிறகும், சிறுமி தனது காதலன் ஜீவாவுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தார். இதனை அறிந்த பெற்றோர் பலமுறை கண்டித்தும், சிறுமி தொடர்ந்து அவருடன் பேசி வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு சிறுமியின் தாய் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூருக்கு சென்றார். வீட்டில் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிவசாஸ்திரி சிறுமியின் செல்போனை எடுத்து பார்த்தார். சிறுமி செல்போனில் காதலனுடன் தொடர்ந்து பேசியது தந்தைக்கு தெரிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த சிவசாஸ்திரி தூங்கிக் கொண்டிருந்த மகளின் கழுத்தை நெரித்துள்ளார். இதையடுத்து தனது சகோதரருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அவர், மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்தனர். அங்கு மயங்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மீட்டு, வானூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பின்னர், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிவசாஸ்திரியை கைது செய்தனர். காதல் விவகாரத்தில் 14 வயது சிறுமியைப் பெற்ற தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT