கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 14 வயது பள்ளி சிறுமி மாயமான சம்பவத்தில், சிறுமியை விரைந்து மீட்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மிடாலம் உதயமார்த்தாண்டம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனது குடும்பத்துடன் குளச்சல் பயணிகள் விடுதி சந்திப்பு மற்றும் ஆவின் பாலகம் அருகே உள்ள சாலையோரப் பகுதியில் தங்கியிருந்தார். இவரது 14 வயது மகள் முத்து, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு குளச்சலில் கோவில் திருவிழா (சூரசம்ஹார நிகழ்ச்சி) நடந்து கொண்டிருந்த சமயத்தில், சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார்.
நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், சிறுமி தங்கியிருந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து சென்றதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமியை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாமோ என்ற கோணத்திலும் சந்தேகம் எழுந்துள்ளது.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளச்சல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமி மாயமாகி 4 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், அவரை விரைந்து மீட்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகம், குளச்சல் பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.