தமிழக செய்திகள்

144 தடை உத்தரவால் கடைக்கோடி மனிதனும் பாதிக்கப்பட கூடாது; நீதிபதிகள் உத்தரவு

அரசின் 144 தடை உத்தரவால் கடைக்கோடி மனிதனும் பாதிக்கப்பட கூடாது என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த 24ந்தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது ஏப்ரல் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.

இதனை அடுத்து, நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 1,100ஐ கடந்து உள்ளது. பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய அச்சமின்றி, எச்சரிக்கை உணர்வுமின்றி மக்கள் ஊரடங்கை மதிக்காமல் பொதுவெளியில் நடந்து கொள்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வீடுகளில் இருந்து தங்களது தேவைக்காக வெளியே வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என கூறி தொடரப்பட்ட வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனை வாட்ஸ்அப் வீடியோ கால் வழியே விசாரணை கொண்ட நீதிபதிகள், அவசியமின்றி மக்கள் வெளியே வந்தால் நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

அதேவேளையில், மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அரசின் 144 தடை உத்தரவால் கடைக்கோடி மனிதனும் பாதிக்கப்பட கூடாது என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT