சென்னை,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் இன்றும், நாளையும் 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், வாக்குப்பதிவு முடித்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த பின்னர் இன்றும், நாளையும் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக இன்று (சனிக்கிழமை) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும், முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பேருந்துகளும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 3,345 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 14,508 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று 19,676 பயணிகளும் நாளை 47,001 பயணிகளும் முன்பதிவு செய்து பயணிக்க உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.