சென்னை,
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் தமிழகத்தில் 1,461 ஏரிகள் வறண்டன. அணைகளில் 36.40 சதவீதம் மட்டுமே நீர்இருப்பு உள்ளது.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். இதில் மேட்டூர், பவானிசாகர் உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி. ஆகும். தற்போது, 90 அணைகளிலும் சேர்த்து 81.65 டி.எம்.சி. (36.40 சதவீதம்) நீர் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
அதிகபட்சமாக மேட்டூர் அணையில் 25.84 டி.எம்.சி., பவானிசாகரில் 15.23, பரம்பிக்குளத்தில் 8.80, சாத்தனூர் 4.18, வைகை 2.64, பெரி யாறு 2.57, பேச்சிப்பாறை 2.16, பாபநாசம் 1.95, அமராவதி 1.70, மணிமுத்தாறு 1.65, கிருஷ்ணகிரி அணையில் 1.34 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஆழியாறு, சோலை யாறு, பெருஞ்சாணி அணைகளில் 1 டி.எம்.சி.க்கும் குறைவாகவே நீர் உள்ளது.
மாநிலத்தில் உள்ள 14,141 பாசன ஏரிகளில் 763 ஏரிகள் மட் டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 564 ஏரிகள் நிரம்பியுள்ளன. மீதமுள்ளவற்றில் 908 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 1,235 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 2,181 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 7,593 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. அதேநேரம், நெல்லையில் 236, சிவகங்கையில் 139 ஏரிகள் உள்பட மாநிலம் முழுவதும் 1,461 ஏரிகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 நீர்நிலைகளிலும் சேர்த்து 5.27 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதி நீரும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத் தில் 10 டி.எம்.சி. நீர் இருந்த நிலையில், தற்போது 50 சதவீதம் நீர் குறைந்துள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் எங்கும் போதிய மழை பதிவாகவில்லை. வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் நீர் சேமிப்பது சவாலாக உள்ளதாகவும், எஞ்சியுள்ள ஒரு மாதத்தில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நடப்பாண்டு இதுவரை இயல்பை விட 13 சதவீதம் குறைவாகவே பதிவாகியுள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழைப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அக்டோபர் 1 முதல் நவம்பர் 19 வரை தமிழகத்தில் இயல்பாக 298.9 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில், 259.9 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது என்று வானிலை அதிகாரிகள் கூறினர்.