தமிழக செய்திகள்

தங்கத்திற்கு 15 சதவீதம் சுங்க வரியா? மத்திய அரசுக்கு செல்வபெருந்தகை கண்டனம்

ஒருபுறம் விலைவாசி உயர்வு. மற்றொருபுறம் வரி உயர்வு. இறுதியில் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தான் என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை இறக்குமதி வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

செல்வ பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தங்கம் என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வும், குடும்பங்களின் பாதுகாப்பான சேமிப்பும் ஆகும். ஆனால், 'தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறிய சில நாட்களிலேயே தங்கம் மற்றும் வெள்ளிக்கு 15சதவீதம் சுங்கவரி (Customs Duty) விதித்திருப்பது, பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சுமையாக்கும் செயல்.

ஒருபுறம் விலைவாசி உயர்வு. மற்றொருபுறம் வரி உயர்வு. இறுதியில் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தான். மக்களின் சேமிப்பையும், பெண்களின் எதிர்கால நம்பிக்கையையும் கூட வரிவிதிப்பின் மூலம் சுரண்டும் ஒன்றிய பாஜக அரசின் இந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். பொருளாதார சுமையால் ஏற்கனவே துன்புறும் மக்களின் நிலையை புரிந்து கொண்டு, இந்த சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.