சென்னை,
தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் ப.வெங்கடரமணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“உணவு தானியங்கள் சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 13 மாவட்டங்களின் மொத்தம் 31 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூ.81 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். அரியலூர், நாமக்கல் மற்றும் மேட்டுப்பாளையம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தலா 3400 டன் கொள்ளளவு கொண்ட 3 நவீன சேமிப்பு கிடங்குகள் ரூ.13 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 10 சேமிப்பு கிடங்கு வளாகங்களில், தொழிலாளர் ஓய்வறை வசதி, ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 17 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.12 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 18 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் வைக்கப்படும் தானியங்களின் முழு நேர கண்காணிப்பினை உறுதி செய்திட கண்காணிப்பு கேமராக்கள் ரூ.1.25 கோடியில் பொருத்தப்படும். உணவு தானியங்களின் தரத்தினை உறுதி செய்திடும் பொருட்டு, அவற்றினை அடுக்கி அட்டிகளாக வைக்கும்போது தரை வழி ஈரப்பதம் தாக்காமல் இருக்கவும், காற்றோட்ட வசதிக்காகவும், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 12 சேமிப்பு கிடங்குகளுக்கு 6 ஆயிரம் எண்ணிக்கை அட்டிக் கட்டைகள் ரூ.1.44 கோடியில் வழங்கப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.