தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - டிடிவி தினகரன் கண்டனம்

திமுகவின் கடந்த ஐந்தாண்டுக்கால இருண்ட ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலமாக மாறியிருக்கிறது.

திருவண்ணாமலை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சுப நிகழ்வில் பங்கேற்க வந்த 15 வயது சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவோ, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வெல்லும் தமிழ்ப் பெண்கள் எனும் நிகழ்ச்சியை நடத்தி தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த திமுகவின் அலட்சியத்தை அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களே தோலுரித்துக் காட்டுகின்றன.

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலேயே அதிகளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் என்ற பெருமையைப் பெற்ற தமிழகம், திமுகவின் கடந்த ஐந்தாண்டுக்கால இருண்ட ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலமாக மாறியிருக்கிறது.

எனவே, கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குரூர மனம் படைத்த அனைவரையும் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.