தமிழக செய்திகள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 160 பேர் சஸ்பெண்ட்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளை திறக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 160 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பணமில்லா பரிவர்த்தனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காலி மதுப்பாட்டில்களை ஒப்படைப்பவர்களுக்கு ரூ.10 வழங்கப்படுகிறது. இதற்காக மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கவும், ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குவோரிடம் கியூஆர் குறியீடு மூலம் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும்போது அவற்றை ஸ்கேன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு கடைக்கு 2 ஸ்கேனிங் எந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், புதிய நடைமுறைகளால் விற்பனையில் காலதாமதம் ஏற்படுவதுடன், பணியாளர்களின் பணிச்சுமையும் அதிகரிப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

ஸ்கேனிங் எந்திரங்கள்

இதையடுத்து, காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க வேண்டும், கூடுதல் ஸ்கேனிங் எந்திரங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பணியிடை நீக்கம்

இதனால், முன்னறிவிப்பின்றி கடைகளை திறக்காத 960 பணியாளர்களுக்கு நேற்று விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர்களில் 160 பேர் மீது டாஸ்மாக் நிர்வாகம் இன்று பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இன்றும் கடைகளை திறக்காத பணியாளர்களுக்கு மீண்டும் மெமோ வழங்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT