தஞ்சாவூர்,
சம்பா, தாளடி பருவத்தில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர வருகிற 16-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ரேவதி தலைமை தாங்கி பேசியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் தற்போது வரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 339 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான நெல் ரகங்கள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் நடப்பு சம்பா, தாளடி பருவத்திற்கு பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.583.50 பிரீமியம் தொகையை இறுதி நாளான அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந் தேதிக்குள் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தஞ்சை மாவட்ட விவசாயிகளில் இதுவரை விவசாய அடையாள எண் பதிவு செய்தவர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 286 பேர். விவசாய அடையாள எண் பதிவு செய்யாதவர்கள் 28 ஆயிரத்து 433 பேர்.
இதுவரை விவசாய அடையாள எண் பதிவு செய்யாதவர்கள் தங்களுடைய நிலத்தின் கணினி சிட்டா, ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.