தமிழக செய்திகள்

17 கைதிகள் தப்பியோட்டம்: கவலையளிக்கும் சிறைத்துறை பாதுகாப்பு - எஸ்.டி.பி.ஐ. விமர்சனம்

உளவுப்பிரிவு முன்கூட்டியே கண்டுபிடிக்கத் தவறியது மிகப்பெரிய உளவுத்துறைத் தோல்வியாகும் என்று எஸ்.டி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

சென்னை,

தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் உமர் பாரூக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

17 கைதிகள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிஉயர் பாதுகாப்பு மிகுந்த சென்னை புழல் மத்திய சிறையில் அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பிய அதிர்ச்சி விலகுவதற்குள், தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

தப்பிச் சென்றவர்களில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட தீவிரக் குற்றவாளிகள் ஆவர். 17 கைதிகள் ஒன்று சேர்ந்து இத்தகைய பெரிய தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியதைச் சிறைத்துறை உளவுப்பிரிவு முன்கூட்டியே கண்டுபிடிக்கத் தவறியது மிகப்பெரிய உளவுத்துறைத் தோல்வியாகும்.

5 மாதங்களில் மட்டும்

திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்த சிறை உடைப்புச் சம்பவங்கள், இன்றைக்குத் தமிழகத்தில் நிஜமாகவே அரங்கேறத் தொடங்கியிருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 5 மாதங்களில் மட்டும் காவல்துறையின் பிடியிலிருந்து சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், சிறுவர் கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 50 சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

பாதுகாப்பு குறைபாடு

சிறைக்குள் இருக்கும் கைதிகளையே முறையாகக் கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பில் கோட்டைவிடும் ஒரு அரசு, வெளியில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு அளிக்கும் என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை.

எனவே, சிறைத்துறையின் தொடர்ச்சியான பாதுகாப்பு குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்றுத் தமிழக அரசு உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பியோடிய கைதிகளை விரைவாகக் கைது செய்வதோடு, சிறை வளாகங்கள் மற்றும் காவல்துறை பொறுப்பில் உள்ள அனைத்து இடங்களின் பாதுகாப்பையும் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT