தமிழக செய்திகள்

குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள்: கே.என்.நேரு இல்லத்தில் நடந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

திருச்சி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.

சென்னை,

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 170 ஆவணங்களையும், 13 மின்னனு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமலாக்கத்துறை கடிதம்

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. இந்நிலையில், நகராட்சித்துறையில் நடந்த 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கே.என்.நேரு. சென்னை ஐகோர்ட்டில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு என்னுடைய தரப்பின் கருத்துகளை இந்த ஐகோர்ட்டு கேட்கவில்லை. எனவே, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

வழக்குப்பதிவு

இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்று கொள்ளவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

25 இடங்களில்

இந்த நிலையில், கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதன்படி திருச்சி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது. 25 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

குறிப்பாக, திருச்சியில் கே.என்.நேரு வீட்டில் 8 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இல்லத்தில் 6 மணிநேரம் சோதனை நடைபெற்றது. இதில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்

லஞ்ச ஒழிப்புத்துறை

திருச்சி மாவட்டம் துறையூர் திமுக நகர செயலாளரும் நகர் மன்ற துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. நாமக்கல்லில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராமலிங்கம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

மோகனூர் சாலையில் உள்ள கே.என்.நேருவின் உறவினரும், ஒப்பந்ததாரருமான துரை என்பவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதேபோல், வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அணைக்கட்டு முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகுமாரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

170 ஆவணங்கள்

இந்நிலையில் டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், மொத்தம் 25 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்களையும், 13 மின்னனு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT