பழனி,
பழனியை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் முருகவேல். இவர், தனது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றை பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். அந்த வாளை ஆய்வு செய்த அருங்காட்சியக காப்பாட்சியர் சசிகலா, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:-
இரும்பினால் செய்யப்பட்ட இந்த வாள் பழங்காலத்தில் போருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாள் மிகவும் துருப்பிடித்த நிலையில் இருக்கிறது. 1.110 கிலோ எடையும், 77 செ.மீ உயரமும், நடுப்பகுதி 3 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. கைப்பிடி வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும், வாளின் மேல் பகுதி சற்றே வளைந்த நிலையிலும் காணப்படுகிறது. இது ஒருபுறம் மட்டும் வெட்டும் வகையில் கூர்மையாக உள்ளது.
வாளின் வடிவமைப்பை கொண்டு இது கி.பி.17 அல்லது 18-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். வாள் கிடைத்த பாப்பம்பட்டி ஊர், அந்த காலத்தில் இரட்டையம்பாடி பாளையப்பட்டு ஜமீன் பகுதிக்கு உட்பட்டு இருந்தது. பின்னர் இரட்டையம்பாடி நெய்க்காரபட்டி ஜமீனுடன் இணைந்தது. இந்த வாளுக்கும், இரட்டையம் பாடி ஊருக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.