சென்னை,
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் 18 பேரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1.59 கோடியை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கையில், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் தினமும் ஆங்காங்கே கைது செய்யப்படுகிறார்கள். லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், லஞ்சம் வாங்கியதாக 18 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர், வணிக ஆய்வாளர், சுகாதார அதிகாரி, வருவாய் ஆய்வாளர், பில் கலெக்டர், கூடுதல் மாவட்ட தீயணைப்பு அதிகாரி, இளநிலை என்ஜினீயர்கள் என அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கைது நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 'ஜி-பே' பரிவர்த்தனை உள்ளிட்ட ரூ.1 கோடியே 59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 ஊழல் வழக்குகளில் அரசு ஊழியர்களுக்கு சிறைத் தண்டனையும் கோர்ட்டு வழங்கியுள்ளது. 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.