சென்னை,
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்தி, இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்தவகையில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, இதயம் காப்போம், வருமுன் பாதுகாப்போம், பாதம் பாதுகாப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம், செயற்கை கருத்தரித்தல் மையங்கள் என்று பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்து வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2,58,80,625 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். இந்த மகத்தான திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஐ.நா விருதும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது United Nation interagency Task Force Award என்கின்ற விருது இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சீரிய திட்டங்களில் முதன்மையானதாக கருதப்படுவது இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 எனும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் யாருக்கு விபத்து ஏற்பட்டாலும் அவர்களை உடனடியாக காப்பாற்றி முதல் 48 மணி நேரத்தில் ரூ.2 இலட்சம் நிதியுதவியுடன் அவர்களின் உயிர்களை காப்பாற்றும் மகத்தான திட்டம் ஆகும். முதலமைச்சர் அவர்களால் 18.12.2021 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம் இன்று வரை 5,22,908 பேருடைய உயிர்களை காப்பாற்றி இருக்கிறது. இதற்காக அரசு செலவிட்டத் தொகை ரூ.505.54 கோடி ஆகும்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
இப்படி பல்வேறு திட்டங்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் =கடந்த 02.08.2025 அன்று சென்னையில் நலம் காக்கும் ஸ்டாலின் எனும் மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இந்த திட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் வட்டாரத்திற்கு 3 என்கின்ற வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 என்கின்ற வகையிலும், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநராட்சிகளில் தலா 4 என்கின்ற வகையிலும், 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 என்கின்ற வகையிலும் 1,256 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த
திட்டத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் அடிப்படையில் நேற்று இரவு (27.02.2026) 07.00 மணிக்கு 1,256 முகாம்கள் வெற்றிகரமாக முடிவுற்று மக்கள் பேராதரவு பெற்றுள்ளது.
18.50 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்
இந்த திட்டத்தைப் பொறுத்தவரை பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறியியல் மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவம் என்று 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் இதன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மிகப் பெரிய அளவில் முழு உடற்பரிசோதனை என்கின்ற வகையில் இந்த திட்டத்தின் மூலம் நேற்று வரை நடைபெற்று முடிந்திருக்கின்ற 1256 முகாம்களில் பயன்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 18,52,561. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இத்திட்டம் மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,256 முகாம்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை புதிதாக பெற்றவர்களின் எண்ணிக்கை 50,190 பேர். மேலும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் 60,682 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர் நலத்துறை சார்பில் பயன்பெற்ற பயனாளிகள் எண்ணிக்கை 3,55,584, அமைப்புச் சாரா தொழிலாளர்கள் 2,78,739, தூய்மை பணியாளர்கள் 96,352 பேரும் பயன்பெற்றிருக்கிறார்கள்.
இந்த முகாம்கள் மூலம் புதிதாக நோய் பாதிப்புகள் உள்ளானவர்களை கண்டறிந்து மேல்சிகிச்சைக்கு பரிந்துரைத்து அவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. புற்றுநோய் பாதிப்புகள் உள்ளானவர்கள் என்று கண்டறியப்பட்டவர்கள் 222 பேர். கண்புரை நோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் 8,401 பேர். காசநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டவர்கள் 595 பேர், இருதய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 1,626 பேர், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 3,877 பேர், புதிதாக சர்க்கரை நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டவர்கள் 1,50,708 பேர், உயர் இரத்த அழுத்தம் 4,28,454 பேர், சிறுநீரக மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் 46,409 பேர், இரத்த சோகை கண்டறியப்பட்டவர்கள் 66,251 பேர் என 7,06,543 பேர் மேல் சிகிச்சைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இந்த திட்டம் வெற்றி பெற மிகவும் முக்கிய காரணமாக அமைந்த துறையின் உயரலுவலர்கள் அனைவருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.