ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் பயங்கர இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் தாக்கியதில் 19 பசுமாடுகள் மற்றும் ஒரு காளைமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முலுகு மாவட்டம் தத்வாய் அருகேயுள்ள அங்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சம்பையா, விவசாயி ஆவார். இவர் 30 பால் தரும் பசுமாடுகள் மற்றும் காளைமாடுகளை வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டருகே உள்ள தனது விவசாய நிலத்தில் கட்டிவைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றிருந்தார். இரவு அந்தப் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் இடிமின்னல் மற்றும் கனமழை பெய்தது.
அப்போது மின்னல் தாக்கியதில் நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 19 பசுமாடுகள் மற்றும் ஒரு காளைமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
நேற்று காலை விவசாய நிலத்துக்குச் சென்ற சம்பையா, தனது கால்நடைகள் அனைத்தும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல ஆண்டுகளாக வளர்த்து வந்த கால்நடைகளை இழந்த வேதனையில் அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை உருக்கமடையச் செய்தது.