தமிழக செய்திகள்

ஜனநாயக கடமையாற்ற சென்னையில் இருந்து 19½ லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த சில தினங்களாக பலர் சொந்த ஊர் சென்றனர்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்ட மாக மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. வேலை, தொழில் சம்பந்தமாக பலர் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னையில் வசித்து வருகிறார்கள். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் கோடை விடுமுறையையொட்டி அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த சில தினங்களாக பலர் சொந்த ஊர் சென்றனர். இதற்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களோடு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் புறப்பட்டு சென்றன. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் 10 ஆயிரத்து 169 வழக்கமான பஸ்களுடன் சேர்த்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

இதில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் முன்பதிவு செய்யப்பட்ட 69 ஆயிரத்து 383 பயணிகளுடன் சேர்த்து 6 லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதேபோல் 6 ஆயிரம் ஆம்னி பஸ்களில் 9 ஆயிரம் பயணங்கள் மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். ஆக சுமார் 16 ஆயிரம் பஸ்களில் சுமார் 10 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுதவிர சென்னையில் கார் வைத்திருக்கும் பெரும்பாலானோரும், ரெயில், பஸ்சில் டிக்கெட் கிடைக்காததால் வாடகை காரில் பலரும் என கடந்த 21 மற்றும் 22-ந்தேதிகளில் சென்னையில் இருந்து சுமார் 12 ஆயிரம் கார்கள் வெளியூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு கார் மூலமாக சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க சொந்த ஊர் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் பெருமளவில் புறப்பட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றதால், சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதுதவிர கடந்த சில தினங்களாக சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் இருந்து வழக்கமாக ரெயில்களோடு, சில சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக ரெயில்கள் மூலமாக சுமார் 9 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு தேர்தலுக்காக சென்னையில் இருந்து சுமார் 19% லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். தேர்தல் விடுமுறை காரணமாக கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. இதுவும் சாலைகள் வெறிச்சோடி போவதற்கு காரணமாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக, தேர்தல் காரணமாக சென்னை மாநகரம் வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவும், வெறிச்சோடியும் காணப்பட்டது.