கோவை,
கோவையில் நகை வியாபாரிகளிடமிருந்து பெற்ற ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளியுடன் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பெரியகடை வீதியில் தங்கம், வெள்ளிக்கட்டிகள் விற்பனை மையம் நடத்திய ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய் அம்பாலால், பிரதீப்குமார் ஆகிய 2 பேர் நகை வியாபாரிகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் அந்த நகை வியாபாரிகளிடமிருந்து விற்பனைக்காகப் பெற்ற 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்கம் மற்றும் 6 கிலோ வெள்ளிக்கட்டிகளுடன் தலை மறைவாகினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து, அந்த 2 பேரின் செல்போன் எண்களைக் கொண்டு தீவிரமாக விசாரித்தனர். கோவையிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் யாரிடம் நகைகளை கொடுத்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.