தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நாசரேத் சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கிற்கு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒரே பைக்கில் 3 பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். அப்போது ஊழியர் அமலதாஸ், பைக்கை இயந்திரத்திற்கு அருகில் கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், ஊழியரை ஆபாசமாகப் பேசி தாக்க முயன்றுள்ளனர்.
ஊழியர் லாவகமாக விலகிக்கொண்டதால், ஆத்திரத்தில் அவர்கள் தாக்கியதில் பெட்ரோல் இயந்திரத்தின் டிஸ்ப்ளே உடைந்து சேதமானது. பின்னர் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர். தொடர்ந்து அதே கும்பல் சாத்தான்குளம் அமராவதி பத்தில் உள்ள சுடுகாட்டுத் தொழிலாளி சின்னத்துரை (வயது 47) என்பவரை வழிமறித்து, அவரைத் தாக்கி அவரிடமிருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்றதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் சதீஷ்குமார் மற்றும் சின்னத்துரை ஆகியோர் அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் தொடர்புடைய சாத்தான்குளம் ஆர்.சி. வடக்கு தெருவை சேர்ந்த ராஜலிங்கம் மகன் இசக்கி அழகுவேல்(25), அழகம்மன் கோயில் தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் விஷ்வா(21) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வாலிபர்கள் தங்கள் தவறை உணர்ந்து நல்வழிப்பட வேண்டும் என்ற நோக்கில், அவர்களைக் காவல் நிலையத்தில் திருக்குறள் வாசிக்க வைத்துப் போலீசார் நூதன முறையில் அறிவுரை வழங்கினர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலுவைராஜ்(34) என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.