காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் வாடிக்கையாளர் போல் நடித்து நகைக்கடையில் 1 சவரன் நகை திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கேசவன் (வயது 55), பாண்டிஸ்வரி(50) ஆகிய இருவரும் நகை வாங்க வந்தனர். கடைக்கு வந்து நகைக்கடைக்காரரிடம் நகைகளை எடுத்து காண்பிக்க கூறினர். அப்போது கடைக்காரர் நகையை எடுத்து காண்பித்திருக்கிறார். நகையை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி 1 சவரன் தங்க கம்மலை கேசவன் கட்டியிருந்த லுங்கியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் நகையை பரிசோதித்த கடைக்காரர் கம்மல் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கம்மல் எங்கே என்று கேட்டார். நாங்கள் எடுக்கவில்லை உங்களிடம் நகைகளை கொடுத்து விட்டோம் என்று தெரிவித்தனர்.
உடனடியாக நகை கடைக்காரர் தாராசந்த் இதுகுறித்து படப்பை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் கேசவன் ஒரு சவரன் கம்மலை லுங்கியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஒரு சவரன் நகையை கேசவன் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் சென்னையை அடுத்த கோயம்பேடு பகுதியில் தங்கி இருந்து இதுபோன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.