கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் உடையார்விளை பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ்ராஜன் (வயது 24). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் விஜி(23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இவர்களது பைக் லட்சுமிபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில், எதிரே வந்த பைக்கை ஓட்டி வந்த ஜஸ்டின்ராஜ்(36) உள்பட 3 பேரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதில் நிதிஷ்ராஜன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த விஜி மற்றும் ஜஸ்டின்ராஜ் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் காவல்துறையினர், உயிரிழந்த நிதிஷ்ராஜனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.