தமிழக செய்திகள்

உற்றுநோக்கப்படும் 2 தொகுதி இடைத்தேர்தல்; 3 மணி நிலவரம் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் வருகிற 9-ம் தேதி எண்ணப்படுகிறது.

சென்னை,

மதுராந்தகம்,தாராபுரம் தொகுதிகளில் பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் வென்ற சத்தியபாமா ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தனர்.

இதனையடுத்து 2 தொதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன் தினம் தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதனை தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.

2 தொகுதிகளிலில் காலை 6.30 மணிக்கு வேட்பாளரின் வாக்குச்சாவடி முகவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கியது.

செல்பி எடுத்து மகிழ்ச்சி

காலையில் இருந்தே ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தினர்.

சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை பார்க்க முடிந்தது. இளம்வாக்காளர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து ஓட்டு போட்டனர். அவர்கள் வெளியில் வந்து ஓட்டு போட்டதற்கான அடையாள மையை காட்டி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு

தாராபுரம் தொகுதியிலும் காலை முதலே விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. தாராபுரம் அடுத்த குண்டடம் மானூர்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி வீராச்சி மங்கலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். திமுக வேட்பாளர் சுகன்யா முதல் வாக்காளராக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல் காட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் கொல்லாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்குசாவடிகள் அனைத்திலும் துணை ராணுவம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைகிறது. 2 தொகுதிகளில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

மதுராந்தகம் தொகுதி

இந்தநிலையில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலின்போது பகல் 3 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 72.41 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

தாராபுரம் தொகுதி

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பகல் 3 மணி நிலவரப்படி 68.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

2026 சட்டமன்ற தேர்தலின்போது தாராபுரத்தில் பகல் 3 மணி நிலவரப்படி 71.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஓட்டு எண்ணிக்கை

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் வருகிற 9-ம் தேதி எண்ணப்படுகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பிற்பகலில் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கும் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT