தமிழக செய்திகள்

மது போதையில் அண்ணனை தாக்கியதில் மரணம்: 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் 2026-ம் ஆண்டில் இதுவரை 7 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, 14 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே மதுபோதையில் அண்ணனை தாக்கி மரணம் ஏற்படுத்திய வழக்கில் தம்பி உள்பட 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றம் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் தாக்கி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே கடந்த 2021-ம் ஆண்டு, அந்தோணியார்புரத்தை சேர்ந்த மிக்கேல்தயாளன் (வயது 50) என்பவரை அவரது தம்பி அந்தோணிமில்டன்(45) மற்றும் அவரது உறவினரான தனசிங்(35) ஆகிய 2 பேரும் சேர்ந்து மதுபோதையில் முன்விரோதம் காரணமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக திசையன்விளை போலீஸ் நிலையத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் புலன் விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன நபர்களை கைது செய்தார்.

கொலையாகாத மரணம் விளைவித்த குற்றம்

புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது, வள்ளியூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (எண்-V) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்மோகன், மேற்சொன்ன நபர்கள் புரிந்த குற்றத்தை கொலையாகாத மரணம் விளைவித்த குற்றம் (IPC 304(ii)) என தீர்மானித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினார்.

தண்டனை விபரம்

IPC 304(ii)-ன்படி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், IPC 201-ன்படி 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம், மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளிகள் ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். குற்றவாளிகள் 2 பேரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் (History Sheet offenders) என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி. பாராட்டு

இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ்சிங், இவ்வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (தற்போது உதவி கமிஷனர், சென்னை மாநகரம்), வழக்கில் விசாரணைக்கு உதவி செய்த நீதிமன்ற காவலர் சபரிஸ் செல்வா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் வடிவேல் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பாராட்டினார்.

7 கொலை வழக்குகளில் 14 பேருக்கு தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தில் 2026-ம் ஆண்டில் இதுவரை 7 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, 14 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 6 சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் உள்பட 8 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT