தமிழக செய்திகள்

தமிழகம், காரைக்காலில் 2 நாட்கள் பயணம்: உள்துறை மந்திரி அமித்ஷா நாளை திருச்சி வருகை

திருச்சியில் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக தேர்தல் நிலவரம் குறித்த மிக முக்கிய ஆலோசனை கூட்டம் அமித்ஷா தலைமையில் நடக்க வாய்ப்புள்ளதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம், காரைக்காலில் 2 நாட்கள் பயணம் மேற்கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) திருச்சிக்கு வருகிறார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். அன்று இரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கும் அமித்ஷா, நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டு செல்கிறார்.

காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இறங்கும் அமித்ஷா, அங்கிருந்து கார் மூலம் காரைக்கால் நகராட்சி திடலுக்கு காலை 11 மணிக்கு சென்றடைகிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பா.ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்னர், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் இங்கிருந்து விமானம் மூலம் சேலம் புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் அமித்ஷா தங்கியிருக்கும் நாட்களில் மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல்.முருகன், பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நயினார்நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களும் திருச்சியில் முகாமிடுகின்றனர். பா.ஜனதா கட்சியின் தலைவர்கள் அனைவரும் திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நாளை மறுநாள் நடைபெறும் 'பாரதம் அடுத்த தசாப்தம்-தொழிலதிபர்கள் சந்திப்பு' என்ற நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

இதில் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இருந்தும் பா.ஜனதா கட்சி சார்புடைய தொழிலதிபர்கள் உள்பட பல்துறை வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், அமித்ஷா தலைமையில் திருச்சியில் நாளை மாலை அல்லது நாளை மறுநாள் தமிழக தேர்தல் நிலவரம் குறித்த மிக முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக பா.ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.