திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் க.அய்யம்பாளையம் ஊராட்சியில் மின்விளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை கதிர்வேல் என்பவர் ஒப்பந்தம் எடுத்து முடித்துள்ளார். இதற்கான 15 பில்களுக்கு பணம் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதித் தொகைக்கான பில்களை விடுவிக்க, ஊராட்சி செயலர் கந்தசாமி (வயது 48) அவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத கதிர்வேல், திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை ஊராட்சி அலுவலகத்தில் வைத்து கந்தசாமியிடம் கதிர்வேல் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார். கந்தசாமியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தாசிரப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி கோபி (வயது 35), தனது நிலத்தை உட்பிரிவு செய்து புதிய பட்டா பெற விண்ணப்பித்திருந்தார். இப்பணியைச் செய்ய வேப்பனப்பள்ளி குறுவட்ட சர்வேயர் கவுதமன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத கோபி, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை ராயக்கோட்டை மேம்பாலம் அருகே கவுதமனிடம் கோபி கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சர்வேயர் கவுதமனை கையும் களவுமாகப் பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.