சென்னை,
ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் திருப்பூரில் கயிறு குழுமத்திற்கான பொது வசதி மையத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதி - II ல் 15 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் 17.95 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வேளாண்மை உற்பத்தி சார்ந்த புதிய தொழிற்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டம், நாயனூரில் 5 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் 29.44 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகம் சார்பில் திருப்பூர் மாவட்டம், முதலிபாளையத்தில் 13 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கயிறு குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெருந்துறையில் 17.95 ஏக்கர் பரப்பளவில் 15 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் 47 தொழில்மனைகளுடன் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெருந்துறை பகுதி-II தொழிற்பேட்டையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். இப்புதிய தொழிற்பேட்டையில், தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யத் தயாராக உள்ளன. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 250 நபர்கள் நேரடியாகவும், 500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறுவர்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், நாயனூர் கிராமத்தில் 29.44 ஏக்கர் பரப்பளவில் 5 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் 105 தொழில்மனைகளுடன் அமைக்கப்பட்டுள்ள நாயனூர் தொழிற்பேட்டையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். இப்புதிய தொழிற்பேட்டையில் தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள்
தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யத் தயாராக உள்ளன. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 600 நபர்கள் நேரடியாகவும், 1200 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறுவர்.
தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகம் மூலம் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டம், முதலிபாளையம் கிராமத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட தென்னை நார் கயிறு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், 8 கோடியே 75 லட்சம் ரூபாய் மாநில அரசு மானியத்துடன் 13 கோடியே 95 லட்சம் ரூபாய் திட்ட செலவில் 34 உறுப்பினர்களை உள்ளடக்கிய கயிறு குழுமத்திற்கான பொது வசதி மையம் நிறுவப்பட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். இதன்மூலம் சுமார் 150 நபர்கள் நேரடியாகவும், 350 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் / கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் / முதன்மை செயலாளர் டாக்டர் பு. உமாநாத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.