திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தாமிர கம்பிகள் திருடிய 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கூடங்குளம் அணுமின் திட்டம் பணி நடைபெறும் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தில் 6 கிலோ தாமிர கம்பிகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக விசாரித்தபோது, அங்கு ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்யும் பீகார் மாநிலம் முபாரக்கான் மகன் கோல்டன்கான் (வயது 26), உத்தரபிரதேச மாநிலம் ராப்செட் மகன் விகாஷ்பட்டேல்(27) ஆகிய 2 பேரும் சிறுகச்சிறுக தாமிர கம்பிகளை நைசாக திருடி வாகனத்தில் கடத்தியது தெரியவந்தது. எனவே அவர்கள் 2 பேரையும் பிடித்து, கூடங்குளம் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.