தமிழக செய்திகள்

விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் கைது

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், போர்வெல் அமைக்க மின் இணைப்பு பெறுவதற்காக தாமரைக்குளம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் ஒரு விவசாயியிடம் மின் இணைப்பு பெற ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர், கள உதவியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

மின் இணைப்பு பெற ரூ.6 ஆயிரம் லஞ்சம்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஊராட்சி, பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், விவசாயி ஆவார். இவர் கடந்த ஜூலை மாதம் விவசாய பயன்பாட்டிற்கு போர்வெல் அமைக்க மின் இணைப்பு பெறுவதற்காக தாமரைக்குளம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முன் இணைப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக மின் இணைப்பு வழங்கப்படும்போது வணிக ஆய்வாளர் வேல்முருகன் ரூ.6 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார்.

மீண்டும் ரூ.1,000 லஞ்சம்

இந்த நிலையில் விவசாயி சுரேஷ்குமாரிடம் மின்வாரிய கள உதவியாளர் நவீன்குமார் என்பவர் மீண்டும் இன்று ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த சுரேஷ்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து கோவை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகர், இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மின்வாரிய அலுவலகம் அருகே மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.

மின்வாரிய வணிக ஆய்வாளர், கள உதவியாளர் கைது

மின்வாரிய அலுவலகத்தில் விவசாயி சுரேஷ்குமார், கள உதவியாளர் நவீன்குமாரிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். இதனையடுத்து மின்வாரிய வணிக ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் கள உதவியாளர் நவீன்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT