திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே இரவு நேர ரோந்துப் பணியில் இருந்த போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற வழக்கில், பிரபல ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர இரவு நேர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 25-ம் தேதி இரவு தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாழையூத்து ரைஸ் மில் அருகே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீசாரை வெட்ட முயன்றதுடன், கொலை மிரட்டலும் விடுத்து அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த சம்பவம் குறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தப்பியோடியவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இன்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளான பொன்மணி மற்றும் இசக்கிராஜா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.