தமிழக செய்திகள்

கோவில் பூசாரி வீட்டில் 2 சவரன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

எட்டயபுரத்தில் ஒரு கோவில் பூசாரி வீட்டின் பூட்டை உடைத்து, பட்டப்பகலில் ரூ.2 லட்சம் பணம், 2 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் கோவில் பூசாரி வீட்டின் பூட்டை உடைத்து, பட்டப்பகலில் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில் பூசாரி

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அலங்காரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 67), எட்டயபுரம் அருகேயுள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் பூசாரியாக உள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்; மற்றொருவர் கட்டிடத் தொழிலாளியாக உள்ளார்.

வீட்டுக் கதவு உடைப்பு- தகவல்

நேற்று காலை 7 மணியளவில் கருப்பசாமி தனது மனைவியுடன் கோவிலுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் மகன்களும் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் இவரது வீட்டிற்கு கூரியர் ஊழியர் தபால் கொண்டு வந்தார். அப்போது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், செல்போன் மூலம் கருப்பசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

2 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரும், மனைவியும் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்கு பதறியடித்து வந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அந்த அறை முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணமும், 2 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீசில் புகார்

இதுகுறித்து கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் வந்த மர்ம நபர்கள்

முதற்கட்ட விசாரணையில், கருப்பசாமி வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்று விட்ட நிலையில் கார் ஒன்று வந்துள்ளது. அந்த கார் நீண்டநேரமாக அவரது வீட்டின் முன்பு நின்றிருந்துள்ளது. அதில் வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.

போலீசார் வலைவீச்சு

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளைப் பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் போலீசார் கைப்பற்றி மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT