தமிழக செய்திகள்

குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ரங்காபுரத்தில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபடுவதாக தர்மபுரி மாவட்ட சுகாதார அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் பசுபதி, ரவீந்தர், வசந்த பாலன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் ரங்காபுரத்திற்கு சென்றனர்.

அங்கு செந்தில் என்பவரது வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கருவில் உள்ள குழந்தை ஆணா?, பெண்ணா? என கண்டறியும் உபகரணங்கள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ரங்காபுரத்தை சேர்ந்த செந்தில் மகள் பரிமளா (34 வயது). இவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறி வந்துள்ளார். இவர் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி (47 வயது) என்பவர் உதவியோடு கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் பரிமளா, சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாலக்கோடு பகுதியில் கருக்கலைப்பு செய்ததாக அவர்கள் இருவரையும் சுகாதார துறையினர் பிடிக்க சென்றபோது அவர்கள் தலைமறைவாகி ஜாமீனில் வெளி வந்ததாகவும், மீண்டும் பென்னாகரம் பகுதியில் அவர்கள் கருக்கலைப்பில் ஈடுபட்டபோது பிடிபட்டதாகவும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.