ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை மாவு அரைக்கும் இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாக கை சிக்கிக்கொண்ட 2 வயது சிறுவன், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் அதிரடி மற்றும் துரித நடவடிக்கையால் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டான்.
ராணிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மாவு அரைக்கும் கடையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் 2 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாரதவிதமாக அருகே இருந்த மாவு அரைக்கும் இயந்திரத்தின் உட்பகுதியில் சிறுவனின் கை நுழைந்துள்ளது. இதில் சிறுவனின் கை இயந்திரத்தின் பாகங்களுக்கு இடையே பலமாக சிக்கிக் கொண்டது. இதில் சிறுவன் வலியால் கத்தி அழுதார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், கையை வெளியே எடுக்க முயற்சித்தும் முடியாததால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், நிலைமையைக் கையாள்வதில் மிகுந்த நிதானத்தையும் எச்சரிக்கையையும் கடைப்பிடித்தனர். சிறுவன் அலறி அழுதுகொண்டே இருந்ததால், அவனுக்கு எவ்வித காயமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தீயணைப்பு வீரர்கள் கவனமாக இருந்தனர். சுமார் சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு, ஹைட்ராலிக் கட்டர்கள் மற்றும் நவீன மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி, இயந்திரத்தின் பாகங்களை சேதப்படுத்தாமல் சிறுவனின் கையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர்.
இயந்திரத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சிறுவனின் கையில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுமில்லை என்றும், அவன் நலமுடன் இருப்பதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் வந்து சாதுரியமாக செயல்பட்டு, சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு படையினருக்கு பெற்றோரும், பொதுமக்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.