தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை தாராளமாக நடப்பதாக பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையாளர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் அப்பகுதியில் கஞ்சா நடமாட்டம் இன்னும் குறையவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஆறுமுகநேரியில் மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் பேயன்விளை புதூர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் பின்புற மைதானத்தில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்றுகொண்டிருந்தனர். ரோந்து வந்த போலீசாரைக் கண்டதும் அந்த 2 பேரும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த வாலிபர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் கையில் வைத்திருந்த பையைத் தீவிர சோதனை செய்தபோது, அதற்குள் 450 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கஞ்சாவை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஒருவர் காயல்பட்டினம், கீழநயினார் தெருவைச் சேர்ந்த அப்துல்லாஷாகிப் மகன் அபூபக்கர்சித்திக் (வயது 21) என்பதும், இவர் தற்போது பேயன்விளையில் வசித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் பேயன்விளை பாஸ்நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வகுமார்(22) என்பதும் கண்டறியப்பட்டது. தாங்கள் இருவரும் இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை அவர்கள் போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.