போதைப்பொருள் பறிமுதல் 
தமிழக செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 20 கிலோ போதைப்பொருள் பறிமுதல்- ஒருவர் கைது

கைது செய்யப்பட்டுள்ள மனோ மீது ஏற்கனவே 2 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் கடற்கரை பகுதியில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ ‘ஹஷீஷ்’ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பழைய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரோந்து பணியில் போலீசார்

ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரை வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.சண்டீஷ் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் சுமார் 12:50 மணியளவில், எஸ்.பி. பட்டினம் காவல் எல்லைக்குட்பட்ட பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கடற்கரையில் சிக்கிய கடத்தல்காரர்

அப்போது அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருவாடானையைச் சேர்ந்த மனோ (வயது 34) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் 2 கிலோ ‘ஹஷீஷ்’ எனப்படும் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த அந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டில் விடிய விடிய சோதனை

அதைத் தொடர்ந்து மனோவின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 17.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 19.8 கிலோ (சுமார் 20 கிலோ) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சாவை விடப் பல மடங்கு சர்வதேச மதிப்பு கொண்ட இந்த போதைப்பொருள், இந்திய மதிப்பில் ஒரு கிலோ ரூ. 2 லட்சம் வரையிலும், இலங்கையில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலும் விலை போகக்கூடியது என போலீசார் தெரிவித்தனர்.

யார் இந்த மனோ?

மனோ மீது ஏற்கனவே 2 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய எல்லையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முதன்மை குற்றவாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் விசாரணை

மனோ மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர். கடல் வழியாக இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்ட பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பல் மற்றும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT