தமிழக செய்திகள்

நிலவரி ரத்து, 20 லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

12,466 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை,

20 லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று, மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசியதாவது:-

கடந்த ஆட்சியில் 3.5 லட்சம் காலி பணியிடங்களில் 25% தான் நிரப்பப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் காலி பணியிடம் இல்லை என்ற நிலை உருவாகும்.

சென்னையில் சிறுவட்ட அலுவலகங்கள்

ரூ. 1.02 கோடியில் பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சேவை பெற சென்னையில் முதற்கட்டமாக 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்.

சான்றிதழ் பெற புதிய நடைமுறை

வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களும் பொதுமக்களுக்கு விரைந்து வழங்க 3 அலுவலர் படிநிலைகளில் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும்.

20 லட்சத்திற்கும் மேற்பட்டோர்

எளிய முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும், பத்திரப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். பத்திரப்பதிவு செய்ததும் தானாக பட்டா மாறும்முறை கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தில், கடந்த ஆட்சிக் காலத்தில் 45 சதவிகிதம் அதுபோல மாற்றப்பட்டுள்ளது.

ஏழை, எளியோர் பயனடையும் வகையில் வீட்டுமனை பட்டா சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

சென்னையில் முதற்கட்டமாக 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும். பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சேவை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலவரி ரத்து

விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆங்கிலேயர் காலத்து நிலவரி வசூல் 1436-ஆம் பசலி (நடப்பாண்டு) ஆண்டு முதல் ரத்து செய்யப்படும்.

எளிமையாகும் அரசு அனுமதி

தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்] சட்டம் 1961, பிரிவு 37A மற்றும் 37B-ன் கீழ் அரசின் அனுமதி வழங்குவதற்கான தற்போது நடைமுறையிலுள்ள நெறிமுறைகளை எளிமைப்படுத்திட உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள்

கடலோர மாவட்டங்களுக்கான வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள். ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கையடக்க கணினிகள் வழங்கப்படும்

12,466 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கையடக்க கணினிகள். 1,253 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கும் கையடக்க கணினிகள் ரூ.68.63 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.