சேலம்,
சேலத்தில் வங்கி மேலாளர் வீட்டில் 20 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சேலம் அம்மாப்பேட்டை சக்தி நகரை சேர்ந்தவர் தேவபிரசன்னா (வயது 39). தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இவர், கடந்த 17-ந் தேதியன்று தனது குடும்பத்தினருடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றார். அவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சேலத்திற்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தேவபிரசன்னா அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்த போது. பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்து அவர் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தேவபிரசன்னா, குடும்பத்துடன் கேரளா சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
பின்னர், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.