தமிழக செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபினை கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் வாலிப ருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் பலாத்காரம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலத்தில் உள்ள விழுப்புரம் ரோடு பகுதியை சேர்ந்த சின்னப்பன் மகன் ராபின் (வயது 28). இவர் கடந்த 2021-ம் ஆண்டு 17 வயதுடைய சிறுமியை காதலித்து உள்ளார். சிறுமியின் வீட்டில் இவர் பெண் கேட்டு உள்ளார். அதற்கு பெண் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த சிறுமியை ராபின் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபினை கைது செய்தனர்.

சிறை

இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா தீர்ப்பு கூறினார். அதில் ராபினுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராபினை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT