சேலம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோடை விடுமுறை, அமாவாசையொட்டி பொதுமக்களின் வசதிக்காக இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை சேலம் கோட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் புதிய பஸ்நிலையம், பெங்களூரு, சென்னை, ஒசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை-பெங்களூரு
அதேபோல், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டுருக்கும். சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சீபுரம், பெங்களூருவுக்கும். பெங்களூருவில் இருந்து, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், ஒசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, கோவை மற்றும் திருப்பூருக்கும். நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருவண்ணாமலை மற்றும் ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேட்டூர்-மாதேஸ்வரன்மலை
அதேபோல், இன்று அமாவாசையையொட்டி சேலம் மற்றும் தர்மபுரியில் இருந்து மேச்சேரி, மேட்டூர், மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர் கோவிலுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.எனவே, இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் பஸ்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.