கோவை,
பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வந்த 2 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிறுமுகை வழியாக கோவைக்கு போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாக சிறுமுகை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் சிறுமுகை போலீசார் சின்னக்கள்ளிப்பட்டியில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் கடந்த 3 நாட்களாக தீவிர கண்காணிப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந் தபோது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் காரை தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது காரில் போதை மாத்திரைகள் இருந்தன. உடனே காரில் இருந்த சிறுமுகையை சேர்ந்த பெயிண்டர் ராஜேஷ் (வயது 26), மற்றும் அவரது நண்பர்கள் கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24), கீர்த்திராஜ் (27), ஸ்ரீஹரி (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.