தமிழக செய்திகள்

2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

இது பழந்தமிழர் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் அறிய உதவும் என வரலாற்று ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

.மதுரை,

மதுரை மாவட்டம், மணியம்பட்டி கிராமத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டறியப்பட்ட தாழிப் பானையுடன் கருப்பு-சிவப்பு நிற கலவையால் செய்யப்பட்ட இரண்டு பழமையான கிண்ணங்களும் கிடைத்துள்ளன. கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள் சங்ககால நாகரிகத்தின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்படுவதால், இக்கண்டுபிடிப்பு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, அப்பகுதியின் மேற்பரப்பில் இன்னும் முழுமையாக வெளிப்படாத நிலையில் இரண்டு முதுமக்கள் தாழிப் பானைகளின் தடயங்களும் தென்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பழங்கால அடக்கத்தளமாக இருந்திருக்கலாம் என வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல், பொருந்தல் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் தளங்களில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல், மதுரை மாவட்டத்தில் இதுவரை 21 இடங்களில் தாழிப் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மணியம்பட்டியில் கிடைத்துள்ள இந்த புதிய கண்டுபிடிப்பு மதுரை மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT