தமிழக செய்திகள்

மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 21 டன் இயற்கை உரம்: விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம்

இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள், பொதுமக்கள் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை நேரில் அணுகி உரத்தைப் பெற்று பயனடையலாம் என நகராட்சி பொது சுகாதாரப் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 21 மெட்ரிக் டன் இயற்கை உரம் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

5 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கப்படுகின்றன. இதில் காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து இயற்கை உரமாக மாற்றும் வகையில் வீரவாஞ்சிநகர், சுப்பிரமணியபுரம், கூடுதல் பேருந்து நிலையப் பின்புறம், பார்க் ரோடு மற்றும் புதுக்கிராமம் ஆகிய 5 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

21 மெட்ரிக் டன் இயற்கை உரம்; விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கல்

இதன் ஒரு பகுதியாக புதுக்கிராமம் மையத்தில் தயாரிக்கப்பட்ட 21 மெட்ரிக் டன் இயற்கை உரம் நேற்று முன்தினம் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் அதிகரிப்பதோடு, பயிர்களின் வளர்ச்சி மேம்பட்டு அதிக மகசூல் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டி போட்டுக் கொண்டு உரத்தை வாங்கி டிராக்டர்களில் ஏற்றிச் சென்றனர்.

குப்பைகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, விவசாயிகளும் பயன்பெறுகின்றனர். எனவே இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை நேரில் அணுகி உரத்தைப் பெற்றுப் பயனடையலாம் என நகராட்சிப் பொது சுகாதாரப் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT