கொடுங்கையூர் எரியூட்டும் நிலையம் 
தமிழக செய்திகள்

கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்தில் 210 டன் சுகாதாரக் கழிவுகள் அகற்றம்

சுகாதாரக் கழிவுகளை முறையாக பிரித்து, தூய்மை பணியாளர்களிடம் தனியாக ஒப்படைத்திட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 01.01.2026 முதல் 15.11.2026 வரை 210 மெட்ரிக் டன் சுகாதார கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

எரியூட்டும் நிலையம்

சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களில் உருவாகும் சுகாதாரக் கழிவுகளை பாதுகாப்பாகவும் அறிவியல் முறையிலும் அகற்றுவதற்காக, கொடுங்கையூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் முறையிலான எரியூட்டும் நிலையத்தின் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு

பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் இதர சுகாதார கழிவுகளை முறையாக சேகரித்து, கொடுங்கையூரில் உள்ள 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அறிவியல் முறையில் அகற்றிட மண்டல அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட களப்பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரக் கழிவுகளை முறையாக பிரித்து, தூய்மை பணியாளர்களிடம் தனியாக ஒப்படைத்திட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அறிவுறுத்தியுள்ளார்.

210 மெட்ரிக் டன் சுகாதார கழிவுகள்

இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் இதர பெருமளவு கழிவுகள் உருவாக்குபவர்களிடம் இருந்து 01.01.2026 முதல் 15.11.2026 வரை மொத்தம் 210 மெட்ரிக் டன் சுகாதார கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக கொடுங்கையூரில் உள்ள 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட அறிவியல் முறையிலான எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதாரக் கழிவுகள் பிற திடக்கழிவுகளுடன் கலப்பது தடுக்கப்படுவதுடன், முறையற்ற கழிவு அகற்றலால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் பொது சுகாதார அபாயங்களும் குறைக்கப்படுகின்றன.

திடக்கழிவு மேலாண்மை

எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் சார்பில் தூய்மையான, சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சென்னையை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பான மற்றும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும், பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் இதர சுகாதார கழிவுகளை காகிதம் அல்லது உரிய உறைகளில் பாதுகாப்பாக சுற்றி, வழக்கமான கழிவு சேகரிப்பு முறையின்படி தூய்மை பணியாளர்களிடம் தனியாக ஒப்படைத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT