தமிழக செய்திகள்

பொள்ளாச்சியில் விதிகளை மீறியதால் நீர்வளத்துறையில் 22 டெண்டர்கள் ரத்து: தமிழக அரசு அதிரடி

சான்றிதழ் வாங்க ஒப்பந்ததாரரை நேரில் வர சொல்லக்கூடாது என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

சென்னை,

அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் பொருட்கள், சேவைகள் அல்லது கட்டுமானப்பணிகளுக்கான டெண்டர்களை வழங்க, தகுதியுள்ள அனைவரையும் பங்கேற்க அனுமதிக்கும் ஒரு வெளிப்படையான ஏல முறையே திறந்த டெண்டராகும்.

டெண்டர்கள்

இதுபோன்று திறந்த டெண்டராக இல்லாமல், பொதுவான பொது ஏலத்திற்கு பதிலாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தகுதி வாய்ந்த குறிப்பிட்ட சில வினியோகஸ்தர்களுக்கு மட்டும் (மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள்) வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட டெண்டர் (லிமிடெட் டெண்டர்) ஆகும். இந்த முறையில் பொள்ளாச்சி நீர்வளப்பிரிவில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன், சான்றிதழ் வாங்க ஒப்பந்ததாரரை நேரில் வர சொல்லக்கூடாது என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. ஆனால் இந்த விதிமுறைகளை மீறி, நேரில் வர வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் கருத்து தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி நீர்வளத்துறையில் வெளியிடப்பட்ட 22 டெண்டர்களை தமிழக நீர்வளத்துறை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் பரம்பிக்குளம் - ஆழியாறு வட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் விழுந்த மண் மற்றும் குப்பைகளை கையாளுதல் மற்றும் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடங்கும்.