நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது மலையாம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடா வெட்டி, பொங்கல் வைத்து திருவிழா நடைபெறுவது சிறப்பாகும்.
அதன்படி, இந்தாண்டு கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி பொங்களாயி அம்மன், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் இரவு முதலில் பெண் ஆட்டை பலி கொடுத்துவிட்டு, வேண்டுதலுக்காக கொடுக்கப்பட்ட மற்ற ஆட்டு கிடாக்களை வெட்டி இரவு முழுவதும் அங்கேயே சமையல் செய்தனர்.
இந்த சமபந்தி விருந்துக்காக 225 கிடாக்கள் வெட்டப்பட்டன. மொத்தம் 3 ஆயிரம் கிலோ கறி சமைக்கப்பட்டு, 500 கிலோக்கும் மேலான அரிசியை பொங்கல் வைத்தனர். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சமபந்தி கறிவிருந்து தொடங்கியது. இந்த விருந்து மதியம் 12.30 மணி வரை நடந்தது.
இதில் சேலம், கரூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீண்டவரிசை யில் நின்று அவர்கள் உணவுகளை தட்டுகளில் வாங்கி சாப்பிட்டனர்.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் கனமழை பெய்தபோது அங்கு சென்று கொண்டிருந்த கர்ப்பிணியான மலையாள பெண்ணுக்கு யாரும் உதவி செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண் சாபம் விட்டதாகவும், இதனால் பெண்கள் விழாவில் பங்கேற்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் வேண்டுதல் வைத்தால் திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.