திருவாரூர், அக்.11-
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் வரும் 22-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
முத்துப்பேட்டை தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இந்த விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் பங்கேற்பதற்கு வசதியாக வரும் 22-ந் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் 24-ந் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.