தமிழக செய்திகள்

பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 2.34 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதி ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 8-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நேற்று வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 229 மாணவ-மாணவிகள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அதில், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 86 பேர் கட்டணம் செலுத்தி நடைமுறைகளை நிறைவு செய்துள்ளனர். ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 141 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். ஜூன் 2-ந் தேதி வரை விண்ணப்பிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு ஜூன் 6-ந் தேதி வரை அவகாசம் உள்ளது.

விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதி ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 8-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது. தரவரிசை பட்டியல் ஜூன் 29-ந் தேதி வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.