திருவாரூர்,
ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்பட்ட பருப்பு மூட்டையில் 2.5 கிலோ சிமெண்ட் கல் இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் பொருள் கொடுக்கும்போது வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை பெறுவதற்காக அப்பகுதி மக்கள் அனைவரும் வந்துள்ளனர்.
அப்போது குடும்ப அட்டைத்தாரர் ஒருவருக்கு பருப்பு வழங்கப்பட இருந்தது. விற்பனையாளர் பருப்பு வழங்கும்போது மூட்டையில் கல் இருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த கல்லின் மதிப்பு சுமார் 2.5 கிலோ எடையில் இருந்ததாக பொருள் வாங்க பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பருப்பு மூட்டையில் எப்படி கல் வந்தது ? என கேள்வி எழுப்பினர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.