தஞ்சாவூர்,
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து நிலைய பகுதியில் 25 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து, ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் ஆம்னி பேருந்து நிலைய பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் திருச்சி அருகே உள்ள புங்கனூர் பகுதியைச் சேர்ந்த கிரி (49), தர்மேந்திரன் (48) என்பது தெரியவந்தது. மேலும், திருச்சியில் இருந்து தஞ்சை பகுதிக்கு விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.