சென்னை,
தமிழக 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 2022–23ஆம் ஆண்டிற்கான 25 சதவீத ஆண்டு ஊதிய உயர்வையும், 8.33 சதவீத குறைந்தபட்ச போனசையும் வழங்க வேண்டும் என்று சென்னை தொழில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு 108 அவசரகால ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், 2021–22 மற்றும் 2022–23ஆம் ஆண்டுகளுக்கு 30 சதவீத ஆண்டு ஊதிய உயர்வும், 2022–23ஆம் ஆண்டிற்கான தீபாவளி போனசும் வழங்கக் கோரி, 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை தொழில் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத் தலைவர் பி. முருகன், இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்னர் தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில், 2021–22ஆம் ஆண்டுக்கான 16 சதவீத ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை அடிப்படையில் வழங்கப்பட்டதால், அந்த ஆண்டிற்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
அதேசமயம், 2022–23ஆம் ஆண்டில் புதிய பேச்சுவார்த்தை நடத்தாமல் அதே 16 சதவீத ஊதிய உயர்வைத் தொடர்ந்ததும், அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படாததும் கருத்தில் கொண்டு, அந்த ஆண்டிற்கு 25 சதவீத ஆண்டு ஊதிய உயர்வை இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏற்கனவே வழங்கப்பட்ட 16 சதவீத உயர்வை இதில் கழித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஊக்கத்தொகை மற்றும் பண்டிகைச் செலவுத்தொகையை போனசாகக் கருத முடியாது என்பதால், 2022–23ஆம் ஆண்டிற்கு தகுதியுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் 8.33 சதவீத குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அத்துடன், வழக்குச் செலவாக இரு தொழிற்சங்கங்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம், இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.